தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து, நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில், அனைவரையும் ஒரே நாளில் நினைவு கூரக் கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த லெப்ரினன்ட் சங்கர் (சத்தியநாதன்) அவர்களின் நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்த எமது தலைவர் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை அறிவித்தார்.
முதலில் தமிழீழத் தேசியக் கொடி ஏற்றலுடன் நிகழ்வு ஆரம்பித்தது. வளர்தமிழ் 12 இல் கல்வி பயிலும் மாணவன் செல்வன் சகிர்தன் தயாபரன் ஏற்றிவைக்க வளர்தமிழ் 12 மாணவன் செல்வன் துளசிதன் முரளிதரன் அவர்கள் உதவி புரிந்தார்.
ஈகைச்சுடரினை, 04.04.1996 ம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி அளவெட்டியில் படையினருடனான நேரடிமோதலின் போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட செம்மலை, மணலாறு, முல்லைத்தீவினை பிறப்பிடமாகக் கொண்ட செல்வநாயகம் பாமினி என்று இயற்பெயர் கொண்டு அழைக்கப்படும் லெப்டினன்ட் வலம்புரி அவர்களின் சகோதரி திருமதி தர்சி ரமேஷ் அவர்கள் ஏற்றிவைக்க ஆசிரியர்கள் மாணவர்களின் கைகளில் உள்ள விளக்குகளை ஏற்றிவைத்தார்கள் அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் தங்கள் கைகளில் இருந்து விளக்குகளை ஏற்றினார்கள்.
துயிலுமில்லப் பாடலுக்கு பின்பு மலர்வணக்கம் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பித்தன.
பேச்சு, கவிதை, நடனம் என பல நிகழ்வுகளுடன் இரண்டரை மணித்தியாலத்துக்கு மேல் இடம்பெற்ற நிகழ்வு போரம்மா போரம்மா என்ற எழுச்சி பாடலுடன் நிறைவுக்கு வந்தது. இறுதியாக தலைமை ஆசிரியர் உரையும் பாடசாலை கீதமும் இடம்பெற்று முடிய கொடிகையேந்தலுடன் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன.