முதல் நிகழ்வாக பிரித்தானிய தேசியக் கொடியேற்றல் : வளர்தமிழ் 12 இல் கல்வி பயிலும் மாணவி செல்வி துவேரிதா சிவச்செல்வன் ஏற்றிவைக்க வளர்தமிழ் 8 மாணவன் செல்வன் கிருந்தாபன் விஜயகுமார் அவர்கள் எடுத்துக் கொடுத்தார்.
அடுத்ததாக தமிழீழத் தேசியக் கொடியேற்றல் : வளர்தமிழ் 11 இல் கல்வி பயிலும் மாணவன் செல்வன் கிருத்திசான் அருள்நிதி ஏற்றிவைக்க வளர்தமிழ் 12 மாணவி செல்வி ஆரகி நகுலேஸ்வரன் அவர்கள் எடுத்துக் கொடுத்தார்.
27ஆந் திகதி சுடரேற்றும் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பர். மாலை 6.05 மணிக்கு தமிழீழம் எங்கும் சமகாலத்தில் அனைத்து ஆலய, தேவாலய மணிகளும், ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும். அந்த நேரத்தைத் தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலுத்துவார்கள். அதேபோல இங்கும் மணிஒலி எழுப்பப்பட்டது.
தமிழீழ விடுதலைப் போருக்கு இன்னுயிரை ஈந்து உரமாகிப்போன மாவீரர்களின் எண்ணிக்கை பத்து, நூறு என்ற நிலை மாறி ஆயிரக்கணக்காக உயர்ந்துவிட்ட நிலையில், அனைவரையும் ஒரே நாளில் நினைவு கூரக் கூடியதாக தமிழீழ விடுதலைப் போரில் முதல் களச் சாவடைந்த லெப்ரினன்ட் சங்கர் (சத்தியநாதன்) அவர்களின் நினைவு நாளான நவம்பர் 27 ஆம் நாளை பொதுவான நாளாகத் தேர்ந்தெடுத்த எமது தலைவர் 1989 ஆம் ஆண்டில் தமிழீழ மாவீரர் நாளை அறிவித்தார்.
ஈகைச்சுடரினை 1990 ம் ஆண்டு காலப்பகுதியில் மாங்குளமுகாம் இறுதித் தாக்குதலின் போது வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட கப்டன் ஜெகன் என்று இயற்பெயர் கொண்டு அழைக்கப்படும் சுரேஸ்குமார் சுந்தரலிங்கம் அவர்களின் சகோதரர் ரமேஷ் சுந்தரலிங்கம் அவர்கள் ஏற்றி வைக்க ஆசிரியர்கள் மாணவர்களின் கைகளில் உள்ள விளக்குகளை ஏற்றிவைத்தார்கள் அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் தங்கள் தங்கள் கைகளில் இருந்து விளக்குகளை ஏற்றினார்கள்.
துயிலுமில்லப் பாடலுக்கு பின்பு மலர்வணக்கம் இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பித்தன.
காற்றோடு கலந்த எம் தியாக வீரர்களை கார்த்திகை மலர் தூவி அஞ்சலி செய்யும் நாள் இன்று, இப் புனித நாளிலே “காலத்தால் அழியாத மாவீரர்” என்னும் தலைப்பிலே வளர் தமிழ் – 03 மாணவி செல்வி அனுஸ்கா அமல்ராஜ் மற்றும் செல்வன் லஸ்வின் சிறிவிந்தன் கவிதை சொல்லி சென்றார்கள்
உயிர்நீத்து எம் தேசத்திற்காக தம்மை ஆகுதியாக்கியவர்கள். தமிழீழத்தின் கனவோடு பயணித்த வேளை காற்றோடு கலந்தனர். காற்றோடு கலந்தவர்களை காலமுள்ளவரை நெஞ்சில் நிறுத்த “கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை” என்னும் பாடலை வளர் தமிழ் – 4 மாணவி செல்வி திருத்திகா சுகர்ணன் அவர்கள் பாடி அனைவரையும் கண்ணீரில் மூழ்கச்செய்தார்.
அடுத்ததாக வளர்தமிழ் 8 மாணவி செல்வி யஸ்வினி கிரிசங்கர் அவர்கள் “காலத்தால் அழியாக் காவிய நாயகர்கள் என்ற தலைப்பில் பேச அவரைத் தொடர்ந்து மங்காப் புகழ்கொண்ட மாண்பு மிகுவீரர்கள் மண்ணுக்காய் தம் உயிரை அற்பணித்த “வணங்குகிறோம் மாவீரரே!” என்ற தலைப்பில் வளர் தமிழ் – 05 மாணவர்கள் செல்வி அகழ்யா கவிராச் மற்றும் செல்வன் சந்தோஸ் ஜெயசேகரன் அவர்கள் கவிதை சொல்லிச் சென்றார்கள்.
அடுத்ததாக மாவீரர் நாள் பற்றிய பேச்சினை வளர்தமிழ் 11 மாணவன் செல்வன் துளசிதன் முரளிதரன் வழங்கிச் செல்ல கார்த்திகை 27 பாடலுக்கு நடனம் மூலம் உயிருட்ட வந்தார்கள் செல்வி சயானி சசிகரன், செல்வி ஆரகி நகுலேஸ்வரன், செல்வி கோணிலா முரளிதரன் மற்றும் செல்வி துவேரிதா சிவச்செல்வன்.
இறுதியாக தலைமை ஆசிரியர் உரையும் பாடசாலை கீதமும் இடம்பெற்று முடிய கொடிகையேந்தலுடன் நிகழ்வுகள் முடிவுக்கு வந்தன.